இன்றைய நல்ல மாணவன் நாளைய சிறந்த குடிமகன். இன்றைய மாணவன் நாளைய வலிமையான, நவீன இந்தியாவின் தூணாக விளங்கக் கூடியவன். கல்வி சரியாக, முறையாக, நிறைவாக கற்பிக்கப்படாததே இன்றைய சமுதாய சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாகும். அறிவியல், கணிப்பொறி வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் பல்துறையில் பயிற்சி பெற்றவர்களாக உருவாக்கப்பட வேண்டும்.
இன்றைய மாணவன் அதிக திறமைசாலி என்பதையும், அவனுக்குத் தக்கவாறு தகுதியுடையவராக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதென்பதையும் ஒவ்வொரு ஆசிரியரும் உணர வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை ஆசிரியர்களும், அரசும் புரிந்துகொள்ள வேண்டிய தருணமும் இதுவே.
பிறவியிலேயே கற்பிக்கும் திறன் பெற்றவர் மிகச் சிறந்த ஆசிரியர். அவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் ஆசிரியர்கள் உருவாக்கப்படுகிறார்கள். கற்பிக்கும் திறன் மிகுந்த, கற்பிக்கும் பொருளில் போதுமான அளவில் புலமை பெற்ற, அன்றாட நாட்டு மற்றும் உலக நடப்புகளை அறியும் ஆர்வம் மிக்க, பல்லூடக அறிவு பெற்ற, நல்ல சமூகத்தை உருவாக்கும் சிந்தனை மிகுந்த, மாணவ, மாணவியர்களிடையே ஏற்படும் காழ்ப்புணர்ச்சியை பக்குவமாக தீர்க்கும் வழி வகை தெரிந்த, சிறிதளவாவது பொதுநல நோக்குடைய ஆசிரியர்களை உருவாக்க வேண்டியது அரசின் கடமை.
மேலும் ஆசிரியர்கள் சமூக அக்கறை, பொறுமை, கடமை. கண்ணியம், கட்டுப்பாடு, பொதுநலம், நாட்டுப்பற்று மற்றும் மாணவர்களின் சூழ்நிலை அறிந்து அவர்களை அனைத்து வகையிலும் வளர்ச்சி பெறச்செய்தல் போன்றவற்றில் திறன் பெற்றவராகவும் உருவாக்க வேண்டியது அரசின் கடமை.
எனவே, ஆசிரியர் பயிற்சி முறையில் மறுமலர்ச்சி கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம். குற்றங்களைக் களையும் தொழிலைச் செய்யும் ஆசிரியர் இன்றைய காலகட்டத்திற்கேற்ப கற்பிக்கும் திறன் பெற்றவராகவும், பல்துறை அறிவுடையவராகவும், கணிப்பொறியைக் கையாளும் பயிற்சி உடையவராகவும், சிறந்த ஆளுமை உடையவராகவும், நல்லதொரு வழிகாட்டும் தன்மையுடையவராகவும், மாணவர் திறமையை அறிந்து அவற்றை ஊக்குவிக்கும் வல்லமை பெற்றவராகவும் உருவாக்க வேண்டியது அவசியம் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகும்.
B.Ed. (இளங்கலை) பட்டப்படிப்பு: ஆசிரியர்களை உருவாக்கும் B.Ed. (இளங்கலை) பட்டப்படிப்புப் பயிற்சியை நான்கு ஆண்டு படிப்பாக மாற்றி அமைக்க வேண்டும். B.Ed. (இளங்கலை) பட்டப் பயிற்சியில், 6 முதல் 10 வகுப்புகளின் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது கணக்கு அல்லது அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடங்களும், அவற்றைக் கற்பிக்கும் முறைகளும், 10 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளின் மனநலவியல், கல்வி வரலாறு, மதிப்பீடு மற்றும் ஆய்வுகள், கணிப்பொறிக் கல்வி ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் கணிப்பொறியைப் பயன்படுத்த வல்லவராக உருவாக்கப்பட வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றவராக மொழியாசிரியர் உருவாக்கப்பட வேண்டும். கணக்கையும், கணக்குப்பதிவியலையும் கற்பிக்க வல்லவராக கணக்கு ஆசிரியர் உருவாக்கப்பட வேண்டும். தாவரவியலையும், விலங்கியலையும், வேதியியலையும், இயற்பியலையும் கற்பிக்க வல்லவராக அறிவியல் ஆசிரியர் உருவாக்கப்பட வேண்டும். வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளாதாரம் ஆகியவற்றைக் கற்பிக்க வல்லவராக சமூக அறிவியல் ஆசிரியர் உருவாக்கப்பட வேண்டும். விளையாட்டுகள் கற்பிக்க வல்லவராகவும், அவசர காலத்தில் முதலுதவி வழங்க போதுமான அளவிற்கு மருத்துவ அறிவு பெற்றவராகவும், மக்கள் தொடர்பு குறித்த ஆழ்ந்த புலமை பெற்றவராகவும் உடற்பயிற்சி ஆசிரியர் உருவாக்கப்பட வேண்டும்.
கணிப்பொறி ஆசிரியர்: எதிர்கால இந்தியாவை உருவாக்கவல்ல இன்றைய மாணவர்கள், கணிப்பொறியை இயக்கும் வல்லமையைப் பெற்றிட, அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கணிப்பொறிகளை இயக்கவும், கணிப்பொறிகளை இயக்க பயிற்சி அளிக்கவும், ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளிக்கும் கணிப்பொறி ஆசிரியரை நியமித்திட வேண்டும். ஓவிய மற்றும் கலை ஆசிரியர்களை கணிப்பொறி ஆசிரியராக்கும் வண்ணம் அவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கணிப்பொறி இயக்கும் வல்லமையைப் பெற்றிட்ட மாணவ, மாணவியர் மேல்நிலைக் கல்வி கற்க வரும்போது அவர்களுக்கு வழங்கப்படும் மடிக் கணிப்பொறியை எளிமையாகக் கையாள்வர்.
நீதி போதனையைக் கற்பிக்கவும், நூலகத்தினை கவனிக்கவும் ஒரு ஆசிரியர்: உலக அளவில் பல முன்னேறிய நாடுகள் வியந்து போற்றிப் புகழ்ந்து, பின்பற்ற ஆசைப்படும் பண்பாடு நம் தமிழர் பண்பாடு. எல்லா நாகரீகங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்வது நம் தமிழர் பண்பாடு. இன்றைய தொலைகாட்சி, தரமற்ற சில திரைப் படங்கள், செல்போன் மற்றும் இணையம் மூலம் மாணவ, மாணவியர் ஈர்க்கப்பட்டு நம் பண்பாட்டிலிருந்து மாறிச் செல்லும் போக்கு இப்பொழுது சிறிது, சிறிதாக ஆனால் மிக விரைவாக நிகழ்ந்து கொண்டிருகிறது. இதைச் சரியாக்க பள்ளிகளில் நீதிபோதனை, அறக்கருத்துக்கள், நல்வழி காட்டி சிந்தனையைத் தூண்டும் புத்தகங்களைப் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் நூலகத்தையும், அதை நிர்வகிக்க ஒரு நூலகர் பணியிடத்தையும் வழங்க வேண்டும். நிதி வசதி இடம் தராது எனில் பள்ளியிலுள்ள சத்துணவு அமைப்பாளரை இப்பணியில் ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
ஒளி, ஒலிக் காட்சி அறை: தமிழ் நாட்டில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வித் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்த ஒவ்வொரு பள்ளியிலும் அதனுடன் இணைந்த ஒளிப்பட வீழ்த்தியுடன் கூடிய [Computer, Overhead Projector, Screen, DVD Players, and Educational DVDs] கூடிய அதிநவீன ஒளி, ஒலிக் காட்சி அறை [AUDIO VISUAL ROOM] அமைத்திட வேண்டும். கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடு அதிநவீனமடையச் செய்ய வேண்டும்.
Sunday, January 8, 2012
Subscribe to:
Posts (Atom)