Sunday, January 8, 2012

கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 5

இன்றைய நல்ல மாணவன் நாளைய சிறந்த குடிமகன். இன்றைய மாணவன் நாளைய வலிமையான, நவீன இந்தியாவின் தூணாக விளங்கக் கூடியவன். கல்வி சரியாக, முறையாக, நிறைவாக கற்பிக்கப்படாததே இன்றைய சமுதாய சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாகும். அறிவியல், கணிப்பொறி வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் பல்துறையில் பயிற்சி பெற்றவர்களாக உருவாக்கப்பட வேண்டும்.

இன்றைய மாணவன் அதிக திறமைசாலி என்பதையும், அவனுக்குத் தக்கவாறு தகுதியுடையவராக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதென்பதையும் ஒவ்வொரு ஆசிரியரும் உணர வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை ஆசிரியர்களும், அரசும் புரிந்துகொள்ள வேண்டிய தருணமும் இதுவே.

பிறவியிலேயே கற்பிக்கும் திறன் பெற்றவர் மிகச் சிறந்த ஆசிரியர். அவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் ஆசிரியர்கள் உருவாக்கப்படுகிறார்கள். கற்பிக்கும் திறன் மிகுந்த, கற்பிக்கும் பொருளில் போதுமான அளவில் புலமை பெற்ற, அன்றாட நாட்டு மற்றும் உலக நடப்புகளை அறியும் ஆர்வம் மிக்க, பல்லூடக அறிவு பெற்ற, நல்ல சமூகத்தை உருவாக்கும் சிந்தனை மிகுந்த, மாணவ, மாணவியர்களிடையே ஏற்படும் காழ்ப்புணர்ச்சியை பக்குவமாக தீர்க்கும் வழி வகை தெரிந்த, சிறிதளவாவது பொதுநல நோக்குடைய ஆசிரியர்களை உருவாக்க வேண்டியது அரசின் கடமை.

மேலும் ஆசிரியர்கள் சமூக அக்கறை, பொறுமை, கடமை. கண்ணியம், கட்டுப்பாடு, பொதுநலம், நாட்டுப்பற்று மற்றும் மாணவர்களின் சூழ்நிலை அறிந்து அவர்களை அனைத்து வகையிலும் வளர்ச்சி பெறச்செய்தல் போன்றவற்றில் திறன் பெற்றவராகவும் உருவாக்க வேண்டியது அரசின் கடமை.

எனவே, ஆசிரியர் பயிற்சி முறையில் மறுமலர்ச்சி கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம். குற்றங்களைக் களையும் தொழிலைச் செய்யும் ஆசிரியர் இன்றைய காலகட்டத்திற்கேற்ப கற்பிக்கும் திறன் பெற்றவராகவும், பல்துறை அறிவுடையவராகவும், கணிப்பொறியைக் கையாளும் பயிற்சி உடையவராகவும், சிறந்த ஆளுமை உடையவராகவும், நல்லதொரு வழிகாட்டும் தன்மையுடையவராகவும், மாணவர் திறமையை அறிந்து அவற்றை ஊக்குவிக்கும் வல்லமை பெற்றவராகவும் உருவாக்க வேண்டியது அவசியம் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகும்.

B.Ed. (இளங்கலை) பட்டப்படிப்பு: ஆசிரியர்களை உருவாக்கும் B.Ed. (இளங்கலை) பட்டப்படிப்புப் பயிற்சியை நான்கு ஆண்டு படிப்பாக மாற்றி அமைக்க வேண்டும். B.Ed. (இளங்கலை) பட்டப் பயிற்சியில், 6 முதல் 10 வகுப்புகளின் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது கணக்கு அல்லது அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடங்களும், அவற்றைக் கற்பிக்கும் முறைகளும், 10 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளின் மனநலவியல், கல்வி வரலாறு, மதிப்பீடு மற்றும் ஆய்வுகள், கணிப்பொறிக் கல்வி ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் கணிப்பொறியைப் பயன்படுத்த வல்லவராக உருவாக்கப்பட வேண்டும்.



தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றவராக மொழியாசிரியர் உருவாக்கப்பட வேண்டும். கணக்கையும், கணக்குப்பதிவியலையும் கற்பிக்க வல்லவராக கணக்கு ஆசிரியர் உருவாக்கப்பட வேண்டும். தாவரவியலையும், விலங்கியலையும், வேதியியலையும், இயற்பியலையும் கற்பிக்க வல்லவராக அறிவியல் ஆசிரியர் உருவாக்கப்பட வேண்டும். வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளாதாரம் ஆகியவற்றைக் கற்பிக்க வல்லவராக சமூக அறிவியல் ஆசிரியர் உருவாக்கப்பட வேண்டும். விளையாட்டுகள் கற்பிக்க வல்லவராகவும், அவசர காலத்தில் முதலுதவி வழங்க போதுமான அளவிற்கு மருத்துவ அறிவு பெற்றவராகவும், மக்கள் தொடர்பு குறித்த ஆழ்ந்த புலமை பெற்றவராகவும் உடற்பயிற்சி ஆசிரியர் உருவாக்கப்பட வேண்டும்.



கணிப்பொறி ஆசிரியர்: எதிர்கால இந்தியாவை உருவாக்கவல்ல இன்றைய மாணவர்கள், கணிப்பொறியை இயக்கும் வல்லமையைப் பெற்றிட, அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கணிப்பொறிகளை இயக்கவும், கணிப்பொறிகளை இயக்க பயிற்சி அளிக்கவும், ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளிக்கும் கணிப்பொறி ஆசிரியரை நியமித்திட வேண்டும். ஓவிய மற்றும் கலை ஆசிரியர்களை கணிப்பொறி ஆசிரியராக்கும் வண்ணம் அவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கணிப்பொறி இயக்கும் வல்லமையைப் பெற்றிட்ட மாணவ, மாணவியர் மேல்நிலைக் கல்வி கற்க வரும்போது அவர்களுக்கு வழங்கப்படும் மடிக் கணிப்பொறியை எளிமையாகக் கையாள்வர்.



நீதி போதனையைக் கற்பிக்கவும், நூலகத்தினை கவனிக்கவும் ஒரு ஆசிரியர்: உலக அளவில் பல முன்னேறிய நாடுகள் வியந்து போற்றிப் புகழ்ந்து, பின்பற்ற ஆசைப்படும் பண்பாடு நம் தமிழர் பண்பாடு. எல்லா நாகரீகங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்வது நம் தமிழர் பண்பாடு. இன்றைய தொலைகாட்சி, தரமற்ற சில திரைப் படங்கள், செல்போன் மற்றும் இணையம் மூலம் மாணவ, மாணவியர் ஈர்க்கப்பட்டு நம் பண்பாட்டிலிருந்து மாறிச் செல்லும் போக்கு இப்பொழுது சிறிது, சிறிதாக ஆனால் மிக விரைவாக நிகழ்ந்து கொண்டிருகிறது. இதைச் சரியாக்க பள்ளிகளில் நீதிபோதனை, அறக்கருத்துக்கள், நல்வழி காட்டி சிந்தனையைத் தூண்டும் புத்தகங்களைப் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் நூலகத்தையும், அதை நிர்வகிக்க ஒரு நூலகர் பணியிடத்தையும் வழங்க வேண்டும். நிதி வசதி இடம் தராது எனில் பள்ளியிலுள்ள சத்துணவு அமைப்பாளரை இப்பணியில் ஈடுபடுத்திக் கொள்ளலாம்.



ஒளி, ஒலிக் காட்சி அறை: தமிழ் நாட்டில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வித் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்த ஒவ்வொரு பள்ளியிலும் அதனுடன் இணைந்த ஒளிப்பட வீழ்த்தியுடன் கூடிய [Computer, Overhead Projector, Screen, DVD Players, and Educational DVDs] கூடிய அதிநவீன ஒளி, ஒலிக் காட்சி அறை [AUDIO VISUAL ROOM] அமைத்திட வேண்டும். கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடு அதிநவீனமடையச் செய்ய வேண்டும்.

Tuesday, May 18, 2010

கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 3

கல்வி சரியாக, முறையாக, நிறைவாக கற்பிக்கப்படாததே இன்றைய சமுதாய சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாகும். அறிவியல், கணிப்பொறி வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் பல்துறையில் பயிற்சி பெற்றவர்களாக உருவாக்கப்பட வேண்டும். "கணிப்பொறி அறிவு பெறாத ஆசிரியர் அரை ஆசிரியர்" என்பது இன்றைய நடைமுறை உண்மையாகும்.

நம்மை விட இன்றைய மாணவன் அதிக திறமைசாலி என்பதையும், அவனுக்குத் தக்கவாறு தகுதியுடையவராக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதென்பதையும் ஒவ்வொரு ஆசிரியரும் உணர வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை அரசும் புரிந்துகொள்ள வேண்டிய தருணமும் இதுவே.

பிறவியிலேயே கற்பிக்கும் திறன் பெற்றவர் மிகச் சிறந்த ஆசிரியர். அவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் ஆசிரியர்கள் உருவாக்கப்படுகிறார்கள். கற்பிக்கும் திறன் மிகுந்த, சிறிதளவாவது பொதுநல நோக்குடைய ஆசிரியர்கள் உருவாக்க வேண்டியது அரசின் கடமை.

எனவே, ஆசிரியர் பயிற்சி முறையில் மறுமலர்ச்சி கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம். குற்றங்களைக் களையும் தொழிலைச் செய்யும் ஆசிரியர் இன்றைய காலகட்டத்திற்கேற்ப கற்பிக்கும் திறன் பெற்றவராகவும், பல்துறை அறிவுடையவராகவும், கணிப்பொறியைக் கையாளும் பயிற்சி உடையவராகவும், சிறந்த ஆளுமை உடையவராகவும், நல்லதொரு வழிகாட்டும் தன்மையுடையவராகவும் உருவாக்க வேண்டியது அவசியம் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகும்.

ஆங்கிலம் எவ்வாறு கற்பிப்பது எனத் தெரியாமலேயே ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கள், இளங்கலை பட்டபடிப்பில், வரலாறு படிக்காமலேயே வரலாறு கற்பிக்கும் ஆசிரியர்கள், புவியியல் படிக்காமலேயே புவியியல் கற்பிக்கும் ஆசிரியர்கள், இயற்பியல் படிக்காமலேயே இயற்பியல் கற்பிக்கும் ஆசிரியர்கள், வேதியியல் படிக்காமலேயே வேதியியல் கற்பிக்கும் ஆசிரியர்கள், உயிரியல் படிக்காமலேயே உயிரியல் கற்பிக்கும் ஆசிரியர்கள் நிறைந்ததுதான் நமது பள்ளிகள். அதையும் மீறி சாதிக்கும் பல ஆசிரியர்கள் உள்ளனர்.

போட்டிகள் நிறைந்த இன்றைய நாளில், அதிவேக அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் நல்ல தலைமுறையை உருவாக்க வேண்டிய இன்றைய சூழ்நிலையில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது இரண்டை மட்டும் படித்த ஆசிரியர்கள் மற்றவற்றை வெற்றிகரமாக கற்பித்தல் என்பது எந்த அளவு நடைமுறை சாத்தியமானது அறிந்துகொள்ளக் கூடிய, புரிந்து கொள்ளக் கூடிய, நிரூக்கத் தேவையில்லாத உண்மை.

எனவே, இடைநிலை ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் எனும் மூன்று வகையான ஆசிரியர்களை உருவாக்கும் கல்வியியல் கல்லூரிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

மூன்று ஆண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு "பட்டையம்" [D. T. Ed.].
நான்கு ஆண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு "இளங்கலைப் பட்டம்" [B. Ed.].
மேலும் இரண்டு ஆண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு "முதுகலை பட்டம்" [M. Ed.].

பட்டையப் பயிற்சியில், 1 முதல் 5 வகுப்புகளின் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களும், அவற்றைக் கற்பிக்கும் முறைகளும், 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளின் மனநலவியல், கல்வி வரலாறு, மதிப்பீடு மற்றும் ஆய்வுகள், கணிப்பொறிக் கல்வி ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கபட வேண்டும்.

இளங்கலைப் பட்டப் பயிற்சியில், 6 முதல் 10 வகுப்புகளின் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது கணக்கு அல்லது அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடங்களும், அவற்றைக் கற்பிக்கும் முறைகளும், 10 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளின் மனநலவியல், கல்வி வரலாறு, மதிப்பீடு மற்றும் ஆய்வுகள், கணிப்பொறிக் கல்வி ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கபட வேண்டும்.

முதுகலை பட்டப் பயிற்சியில், 11 முதல் 12 வகுப்புகளின் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது கணக்கு அல்லது அறிவியலில் ஏதேனும் ஒரு பிரிவு அல்லது சமூக அறிவியலில் ஏதேனும் ஒரு பிரிவு, etc. ஒரு பாடம், அதைக் கற்பிக்கும் முறைகளும், 15 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளின் மனநலவியல், கல்வி வரலாறு, மதிப்பீடு மற்றும் ஆய்வுகள், கணிப்பொறிக் கல்வி ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கபட வேண்டும்.

கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 2

மாணவர் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அல்லது சமுதாயத் தேவைக்கு ஏற்றவாறு, அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலிருந்து 6 முதல் 8 ஆம் வகுப்புகளை மட்டும் தனித்து பிரித்து புதியதாக உயர்நிலைப் பள்ளியாகவும், 1 முதல் 5 வகுப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளியாகவும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துவதற்கு பதில் புதியதாக உயர்நிலைப் பள்ளியே துவக்கப்பட வேண்டும். RMSA திட்டத்தின் மூலம் அல்லது NABARD வங்கி நிதி உதவி மூலம் ஒரே ஆண்டில் உயர்நிலைப் பள்ளியை முழு கட்டமைப்பு உடைய பள்ளியாக மாற்றியமைக்க முடியும்.

இவ்வாறே மாணவர் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அல்லது சமுதாயத் தேவைக்கு ஏற்றவாறு, அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை மட்டும் தனித்து பிரித்து புதியதாக மேல்நிலைப் பள்ளியாகவும், 6 முதல் 10 ஆம் வகுப்புகளை மட்டும் கொண்ட உயர்நிலைப் பள்ளியாகவும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மகளிர் உயர்நிலைப் பள்ளியை பிரித்து அமைப்பது போல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மாற்றியமைக்க முடியும்.

ஒரே ஊரில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளிகளை மிக எளிதாக தேவைக்கேற்ப அல்லது வசதிக்கேற்ப 6 முதல் 10 ஆம் வகுப்புகளை மட்டும் உள்ள உயர்நிலைப் பள்ளியாகவும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை மட்டும் உள்ள மேல்நிலைப் பள்ளியாகவும் மாற்றியமைக்க முடியும்.

உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துவதற்கு பதில் புதியதாக மேல்நிலைப் பள்ளியே துவக்கப்பட வேண்டும். NABARD வங்கி நிதி உதவி மூலம் அல்லது பொதுமக்கள் பங்களிப்பு மூலம் ஒரே ஆண்டில் மேல்நிலைப் பள்ளியை முழு கட்டமைப்பு உடைய பள்ளியாக மாற்றியமைக்க முடியும்.

இரண்டு ஏக்கர் நிலம் மற்றும் ஐந்து லட்சம் கொடுப்பவர்கள் பெயரை உயர்நிலைப் பள்ளியின் பெயரோடு இணைத்துக்கொள்ள வழிவகை செய்வதன் மூலம் பொதுமக்கள் பங்களிப்பைப் பெற இயலும்.
அவ்வாறே இரண்டு ஏக்கர் நிலம் மற்றும் பத்து லட்சம் கொடுப்பவர்கள் பெயரை மேல்நிலைப் பள்ளியின் பெயரோடு இணைத்துக்கொள்ள வழிவகை செய்வதன் மூலம் பொதுமக்கள் பங்களிப்பைப் பெற இயலும்.

மிகச் சரியாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினால் அடுத்த மூன்று ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறை, தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மட்டுமே கொண்டதாக மாற்றியமைக்க முடியும்.

இலவச பஸ்பாஸ் மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்குவதன் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு எந்தவொரு பிரச்சனை ஏற்படாமலும், பொதுமக்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் எந்தவொரு எதிர்ப்பு இன்றியும், முழு ஒத்துழைப்போடும்
மேற்கூறியவற்றை நடைமுறைப்படுத்த இயலும்.

இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்ளாகவும் பதவி உயர்வு வழங்கலாம்.

Sunday, May 16, 2010

கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் - 1

பள்ளிக் கல்வியில் 1 முதல் 5 வகுப்புகளைக் கொண்ட தொடக்கப் பள்ளிகள், 1 முதல் 8 வகுப்புகளைக் கொண்ட நடுநிலைப் பள்ளிகள், 6 முதல் 10 வகுப்புகளைக் கொண்ட உயர்நிலைப் பள்ளிகள், 6 முதல் 12 வகுப்புகளைக் கொண்ட மேல்நிலைப் பள்ளிகள் என நான்கு வகையான பள்ளிகள் உள்ளன.

அவற்றை

1. 1 முதல் 5 வகுப்புகளைக் கொண்ட தொடக்கப் பள்ளிகள்
2. 6 முதல் 10 வகுப்புகளைக் கொண்ட உயர்நிலைப் பள்ளிகள்
3. 11 முதல் 12 வகுப்புகளைக் கொண்ட மேல்நிலைப் பள்ளிகள்

என மூன்று வகையான பள்ளிகள் மட்டுமே உள்ளவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும்.

தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களும், மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களும் பணியாற்றும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

ஒன்றிய அளவில் தொடக்கப் பள்ளிகள் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் [AEEO - Elementary] அவர்களாலும், மாவட்ட அளவில் தொடக்கப் பள்ளிகள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் [DEEO - Elementary] அவர்களாலும், மாவட்ட அளவில் உயர்நிலைப் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலர் (உயர்நிலை) [DEO - Secondary] அவர்களாலும், மாவட்ட அளவில் மேல்நிலைப் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலர் (மேல்நிலை) [DEO - Higher Secondary] அவர்களாலும் நிர்வகிக்கப்பட வேண்டும்.

சுமார் 75 பள்ளிகளுக்கு ஒரு மாவட்டக் கல்வி அலுவலர் என்ற வகையில் கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இது பள்ளிகளைத் திறம்பட நிர்வகி்க்கவும், பள்ளிகளின் தரத்தைப் பார்வையிடவும், மாணவர்கள்களின் கற்றல் அடைவினை மேம்படுத்தவும், மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தினை உயர்தவும் உதவியாக இருக்கும்.

மாவட்ட அளவில் அனைத்து வகைப் பள்ளிகளும் முதன்மைக் கல்வி அலுவலர் [CEO] அவர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும்.

மாநில அளவில் தொடக்கப் பள்ளிகள் தொடக்கக் கல்வி இயக்குநர் [Director - Elementary] அவர்களாலும், மாநில அளவில் உயர்நிலைப் பள்ளிகள் உயர்நிலைக் கல்வி இயக்குநர் [Director - Secondary] அவர்களாலும், மாநில அளவில் மேல்நிலைப் பள்ளிகள் மேல்நிலைக் கல்வி இயக்குநர் [Director - Higher Secondary] அவர்களாலும் நிர்வகிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு தொடக்கப் பள்ளியும் [மாணவர்கள் எண்ணிக்கைக்குத் தக்கவாறு] குறைந்தது மூன்று இடைநிலை ஆசிரியர், ஒரு தமிழாசிரியர் பணியிடங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளியும் [மாணவர்கள் எண்ணிக்கைக்குத் தக்கவாறு] குறைந்தது ஐந்து பட்டதாரி ஆசிரியர், ஒரு தமிழாசிரியர், ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு இளநிலை உதவியாளர், ஒரு அலுவலக உதவியாளர், ஒரு இரவுக்காவலர் பணியிடங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியும் [மாணவர்கள் எண்ணிக்கைக்குத் தக்கவாறு] குறைந்தது ஆறு முதுகலை பட்டதாரி ஆசிரியர், ஒரு உடற்கல்வி இயக்குநர், ஒரு உதவியாளர், ஒரு ஆய்வக உதவியாளர், ஒரு அலுவலக உதவியாளர், ஒரு இரவுக்காவலர் பணியிடங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

Hai!

தமிழர்கள அனைவருக்கும் எனது வணக்கங்கள்.